மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஜூன் 12 அன்று விசாரிக்க உள்ளது.

நாடு முழுவதும் காலியாக உள்ள 26 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 18 அன்று தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது; அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மீனாட்சி நடராஜனை களமிறக்கியிருந்தது.

தெலுங்கானாவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை அவர் மறைத்ததாக பா.ஜ. வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சந்தித்து, இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், நடைபெற்று வரும் தேர்தல் செயல்முறைகளின் நடுவில் இந்த மனு எவ்வாறு ஏற்கத்தக்கது என்ற கேள்வியை நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு எழுப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.