கேரளாவில் மிக உயரமான யானையாக கருதப்படும் ‘ராமன்’ யானையை மாநில அரசு தன் சொந்த செலவில் மறுவாழ்வு முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10.53 அடி உயரமுள்ளதாக கூறப்படும் ராமன் யானையை கிருஷ்ணன் குட்டி பராமரித்து வந்தார். திருமண விழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வருமானம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், யானைகளை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு மீறப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு, “வாயில்லா ஜீவன்களுக்கு நடக்கும் அநீதியை புறக்கணிக்க முடியாது; விலங்குகள் நலனில் நீதிமன்றம் மவுன சாட்சியாக இருக்காது” என்று தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கிருஷ்ணன் குட்டிக்கு ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், கிருஷ்ணன் குட்டியிடமிருந்து யானையை பறிமுதல் செய்து கேரள அரசே மறுவாழ்வு மையத்தில் நன்கு பராமரிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு தற்காலிகமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை ஜெயகிருஷ்ண மேனன் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமன் யானை மாதா அமிர்தானந்தமயி மடத்துக்குச் சொந்தமானது என்றும், பராமரிப்புக்காக தற்காலிகமாகவே கிருஷ்ணன் குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு மாறாக, உயில் மற்றும் தானப்பத்திரங்கள் மூலம் சட்டப்பூர்வமாக யானை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கடந்த 10–12 ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும் கிருஷ்ணன் குட்டி உரிமை கோரியுள்ளார்.





