சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் வழக்குப்பதிவு அல்லது புலன் விசாரணை போன்ற பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று அப்படையின் ஐ.ஜி. பவானீஸ்வரி பேட்டியில் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவே இந்த பிரத்யேக படை உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். இதற்காக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ரோந்து பணிக்காக 316 நான்கு சக்கர வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள், 49 டிரோன் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

டி.ஜி.பி. அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாகவும், புதிதாக 2,545 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் சப்-டிவிஷன் வாரியாக 270 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 70 குழுக்கள் தற்போது பணியில் உள்ளன.

இந்த படை மென்பொருள் நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் என்றும், தேவையெனில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். குற்றம் செய்தவர்களை பிடித்து சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தார்.

தற்போது அவசர எண்கள் 100 மற்றும் 112 மூலம் பெண்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. இனி சிங்கப்பெண் படையை தொடர்பு கொள்ள தனி உதவி எண்கள் அறிவிக்கப்படும்; ‘காவலன்’ உதவி செயலியிலும் அதற்கான வசதி சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.