புதுடில்லி: இல்லத்தரசிகள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களின் உழைப்பை மாதம் ரூ.30,000 வரை மதிப்பிடலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை வலியுறுத்தியுள்ளது.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கும் போது, இழப்பீடு கணக்கீட்டிற்காக இல்லத்தரசியின் பணிக்கு குறைந்தபட்ச மாத வருவாயாக ரூ.30,000 எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இத்தகைய உழைப்பாளர்கள் தேசத்தை உருவாக்குவதில் பங்கு பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டது. சமையல், குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு, குடும்ப மேலாண்மை போன்ற பணிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு இணையற்ற சேவைகளாக பங்களிக்கின்றன என்றும் தெரிவித்தது.
இல்லத்தரசிகளை வெறும் வேலையாட்கள் எனப் பார்க்கக் கூடாது என்றும், மனிதகுலம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பணி துணை நிற்கிறது என்றும் அமர்வு மீண்டும் வலியுறுத்தியது.





