சென்னை: தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான மின்சாரம் உள்ளது; மொத்தமாக மின் பற்றாக்குறை இல்லை என்று மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சில இடங்களில் ஏற்படும் மின் தடைகளை வைத்து, மின் வாரியம் முழுவதும் செயலிழந்தது போல தவறான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தின் மின் தேவை மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்ததாக அதிகமாக உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் தேசிய மின் பகிர்ந்தளிப்பு மையம் தமிழகத்தின் மின் தேவையும் விநியோகமும் உடனுக்குடன் கண்காணிப்பதாக தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏற்பட்ட மின் தடைகள் குறித்து விளக்கமளித்த அவர், சில இடங்களில் மின் சாதன பழுதுகள் காரணமாகவும், சில இடங்களில் பணிகளின்போது கேபிள்கள் சேதமடைந்ததாலும் தடைகள் ஏற்பட்டதாக கூறினார். அரும்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணியின் போது மின்கேபிள் சேதமடைந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறைந்த வீடுகள் இருந்த பகுதிகளில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில், புதிய டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் விநியோக பெட்டிகளை அமைக்க தேவையான இடம் வழங்க மறுப்பது பல இடங்களில் சிக்கலாக இருப்பதாக அவர் கூறினார். உதாரணமாக, எழும்பூர் ரித்தர்டன் சாலையில் டிரான்ஸ்பார்மர் வைக்க இடம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கோடை காலங்களில் முன்பும் மின் தடைகள் ஏற்பட்டுள்ளதை நினைவூட்டிய அவர், பகலில் கிடைக்கும் சூரிய மின்சாரம் இரவில் கிடைக்காததும், காற்றாலை மின்சாரம் திடீரென குறைவதும் நெருக்கடியை உருவாக்கும் என்றார். இருப்பினும், மின் தடை புகார்களை விரைவாக பெற்று சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.