வரும் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 18ல் தொடங்க உள்ளதாகவும், முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவராக உதயநிதிக்கு இது முதல் கூட்டத்தொடர் என்பதால் தி.மு.க. வட்டாரத்திலும் கவனம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக த.வெ.க. அரசின் மீது நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பின்போது உதயநிதி பேசிய உரை பெரும் வரவேற்பை பெற்றதாகவும், அதற்கு சட்டசபை மேடையில் உடனடி பதில் அளிக்க முடியாமல் முதல்வர் விஜய் வீட்டுக்கு சென்று நீண்ட அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறினர். இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் உடனுக்குடன் பதிலடி தரவும், துறை சார்ந்த விவாதங்களை முன்வைத்து எதிர்க்கட்சியை எதிர்கொள்ளவும் விஜய் தயாராகி வருவதாக தகவல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த பின்னணியில் உதயநிதியும் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரம், மின் வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வர தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவிரி தொடர்பான விவகாரங்கள் கடந்த பாதை குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் தகவல்கள் வழங்கி பயிற்சி அளிப்பதாகவும், மின் வெட்டு விவகாரத்தைப் புரிந்துகொள்ள தற்போதைய மின்வாரிய அதிகாரி ஒருவரின் மூலம் தகவல்கள் பெறுவதாகவும் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டு புள்ளிவிவரங்களை சேகரித்து அடிக்கடி வாசித்து தயாராகி வருவதோடு, சட்டசபை நடைமுறைகளில் அனுபவம் உள்ள அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசித்து வருகிறார்; இதற்காக தினமும் ஐந்து மணி நேரம் வரை பயிற்சி எடுக்கிறார் என்றும் அவர்கள் கூறினர்.





