பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மூன்று நாள் பயணமாக தலைநகரை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து நேரடியாக தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றதுடன், போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு, முதல்வர் விஜய் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தார். பூங்கொத்து வழங்கி குறுகிய நேரம் உரையாடிய அவர், பின்னர் மாலை 5.45 மணியளவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் ராதாகிருஷ்ணனை சந்தித்து பரஸ்பரம் பூங்கொத்து வழங்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சி தலைவர் சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்தார்; அப்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார். தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு ஆதரவு அளித்ததற்காக விஜய் நன்றி தெரிவித்ததுடன், அமைச்சரவையில் கூட்டணி பங்கு மற்றும் ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டதற்காக காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறினர்.
பின்னர், இ.கம்யூ. தலைவர் டி. ராஜா விடுத்த அழைப்பை ஏற்று, இந்திரஜித் குப்தா மார்க்கில் உள்ள அக்கட்சியின் அஜய் பவனுக்கு முதல்வர் விஜய் சென்றார். வாசலிலேயே டி. ராஜா வரவேற்று சில நிமிடங்கள் பேசினார்; அதன் பின்னர் முதல்வர் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.





