சென்னை: பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை தொடங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தை வரும் செப்டம்பரில் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதன்படி, தேசிய கட்சிகளின் அமைப்பு முறை தமிழக அரசியலில் தரைமட்டத்தில் முழுமையாக செயல்படுவதில்லை என்ற பார்வை அண்ணாமலைக்கு உள்ளது. தேசிய கட்சிகள் பேசும் “மொழி” தமிழக மக்களுக்கு புரியாது என அவர் முன்பே தெரிவித்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் நினைவூட்டுகின்றன.
இதன் அடிப்படையில், திமுக-அதிமுக போன்று வார்டு, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநிலம் என பல அடுக்குகளில் கட்சி அமைப்பை உருவாக்கி நிர்வாகிகளை நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, நீண்ட காலம் திராவிட கட்சிகளுடன் பயணித்து தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சிலரிடம் அமைப்பு முறை குறித்து ஆலோசனையும் பெறப்படுவதாக தகவல்.
மேலும், பா.ஜ.க. பாணியில் மாநில பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள் என நியமிப்பதை தவிர்த்து மண்டல செயலர்கள் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஒரே பதவியில் நீண்ட ஆண்டுகள் தொடரும் நடைமுறை இருக்கக்கூடாது என்பதால், ஒருவர் ஒரு பதவியில் இருக்கக்கூடிய காலம் மற்றும் தேர்தலில் போட்டியிடக்கூடிய முறை எண்ணிக்கை போன்றவற்றுக்கு வரம்பு நிர்ணயிப்பது குறித்தும் பல தரப்பினருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





