புதுடில்லி: பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் டெல்லியைச் சேர்ந்த எஸ்.எம்.பி.பி. நிறுவனம், ராணுவத்துக்கு ‘காமிகேஸ்’ வகை டிரோன்களை வழங்கியுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘அக்னிவேக்’ என்ற பெயரில் 106 தற்கொலை டிரோன்கள் ராணுவத்துக்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த டிரோன் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகவும், 180 கி.மீ. வரை தொடர்ந்து பறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் ராணுவ உள்கட்டமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள், ரேடார் நிலையங்கள் போன்ற முக்கிய இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

மேலும், ஜி.பி.எஸ். அமைப்பை குழப்பினாலும் அல்லது முடக்க முயற்சித்தாலும் தடையின்றி இலக்கை அடையும் வகையில் இந்த டிரோன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.