உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவிலின் நன்கொடை வசூல் தொடர்பாக முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோவிலின் கணக்கு பொறுப்பாளராக இருந்த மஹிபால் சிங், நன்கொடை வசூலில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் பா.ஜ.க. மவுனம் சாதிக்கிறது என விமர்சனம் செய்தார்.
இதற்கிடையில், அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாசின் வாரிசான மஹந்த் கமல் நயன் தாஸ், குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். நேர்மையான, வெளிப்படையான விசாரணைக்காக அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங், நன்கொடையில் முறைகேடு தொடர்பாக தனக்கு “பல விஷயங்கள் தெரியும்” என கூறியபோதும், அவற்றை தற்போது வெளிப்படுத்தினால் தனக்கே பிரச்னை ஏற்படும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.





