டில்லியில் ஜனாதிபதி மாளிகை கலாசார மையத்தில் நடைபெற்ற நிடி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் மத்திய அரசுடன் “ஆக்கப்பூர்வமாக” இணைந்து செயல்படுவோம்; அதே நேரத்தில் தமிழகத்தின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாக பாதுகாப்போம் என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் அவர் முதல் முறையாக பங்கேற்றார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல்களுக்கிடையிலும் தமிழகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்வதாகக் கூறிய அவர், மாநிலத்தின் உறுதித்தன்மை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம், மேகக் கணினி, செமிகண்டக்டர் போன்ற துறைகளில் மாவட்டம் தோறும் தொழில்நுட்ப திறன் மையங்களை அமைக்க மத்திய அரசு ஆதரவு வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரினார்.

கல்வி-சுகாதார துறையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றார். மேலும் “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” முன்னெடுக்க மாநில அரசு விரும்புவதாகவும், அனைவருக்கும் வீடு மற்றும் நிரந்தர வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க மத்திய உதவி தேவை என்றும் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த தொடங்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”க்கு மத்திய அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம் என்றார். அதேபோல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டம் முடிந்ததும் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய தமிழக அரசு முழுமூச்சுடன் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.