காஞ்சிபுரத்தை சேர்ந்த ‘ஏ’ பிளஸ் வகை சரித்திர பதிவேடு குற்றவாளி தினேஷை, காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவின் மாநில துணைத் தலைவராக நியமித்துள்ளது. இந்த நியமனம் உள்ளூரில் பலரிடமும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் பதிவுகளின்படி, 2016ல் பிரபல ரவுடி ஸ்ரீதர் உயிரிழந்ததற்குப் பிறகு தினேஷ் முக்கிய முகமாக உருவானார். ஸ்ரீதரிடம் ஓட்டுநராக இருந்த தினேஷ் ஒரு அணியாகவும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா மற்றொரு அணியாகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மோதல்கள் அடிக்கடி நடந்ததாகவும், அதனால் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக போலீசார் அவரை கைது செய்து கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளில் அடைத்திருந்ததாகவும் தகவல். நியமனத்துக்குப் பிறகு, பதவி வழங்கியதற்காக மாநில ஆர்.டி.ஐ. பிரிவு தலைவர் கனகராஜூக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்டதும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.





