திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக இ.கம்யூ. அறிவிப்பு

கோவை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ.) இனி இல்லை என அக்கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் திமுக கூட்டணியில் இருந்தாலும் தற்போதைய சூழலில் அக்கூட்டணியில் தொடர இயலாது என்றும் அவர் கூறினார்.

மேலும், முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தற்போது அந்த கூட்டணியில் இல்லை என்றும், அவை த.வெ.க. தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கின்றன என்றும் தெரிவித்தார். இரு தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க கூட்டணி கட்சிகளை தாங்களே அனுப்பியதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது சரியல்ல என விமர்சித்த அவர், த.வெ.க.-வை புதிய ஜனநாயக சக்தியாக கருதுவதாகவும் தெரிவித்தார். வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், சட்டம்-ஒழுங்கு சீர்செய்வதில் தாமதிக்கக் கூடாது; பெண்கள், சிறுமியர் பாதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.

முந்தைய திமுக ஆட்சியில் தவறுகள் இருந்தால் அவற்றின் மீது த.வெ.க. அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செய்தியாளர்களை முதல்வர் விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு இல்லை என்றும், “கல்லாப்பெட்டி கட்சிகள், அல்லு சில்லு கட்சிகள்” என்ற விஜயின் விமர்சனம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.