சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் கட்சி தலைமை பாடம் கற்கவில்லை என தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் தரப்பில் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.

தோல்வி காரணங்களை ஆராய ‘கள ஆய்வு’ குழுக்களை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அறிவாலயத்தில் 23 செய்தித் தொடர்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும் ஆலோசனைக்கு அழைக்கப்படாத நிலையில், தோல்விக்குப் பிறகாவது கருத்துகளை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வந்ததாக சிலர் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலின் உதவியாளர் எழுதி வைத்த குறிப்பை வாசித்ததாகவும், தாங்கள் பேசிய கருத்துகளுக்கு ஸ்டாலினும் உதயநிதியும் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

செயல் திட்டங்கள் குறித்து பேசும்போது இடையூறுகள் ஏற்பட்டதாகவும், ‘கள அரசியல்’ தேவையைப் பற்றிய விவாதத்தில் கருத்து வேறுபாடு வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், முன்பே இதே பணிகளை செய்தவர்களிடமே மீண்டும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்புக்கான வாட்ஸ்அப் குழு போன்ற அடிப்படை ஏற்பாடுகள்கூட இன்னும் செய்யப்படவில்லை எனவும், மீடியாவை கவர்வதை விட மக்களை கவர்வதே முக்கியம் என்ற யதார்த்தம் தலைமைக்கு இன்னும் புரியவில்லை எனவும் சில செய்தித் தொடர்பாளர்கள் கூறினர்.