தமிழக அரசு துறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகாரை விசாரிக்க, பொதுப்பணித்துறை குழு அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் தாக்கல் செய்த மனுவில், உள்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற்றதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில் பல துறைகளில் போலி ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
2022 முதல் 12-க்கும் மேற்பட்ட பணிகளை ‘சீ ராக் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீ பதி அசோசியேட்ஸ்’ என்ற இரண்டு நிறுவனங்கள் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பெற்றதாக மனுதாரர் கூறினார். மேலும், உண்மையான போட்டியாளர்கள் பங்கேற்க முடியாத வகையில் இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தங்களுக்குள் போலி போட்டியை உருவாக்கியதாகவும், தகுதி பெற சமர்ப்பித்த துணை ஒப்பந்ததாரர் அனுபவச் சான்றிதழ்கள் போலியானவை என RTI மூலம் கிடைத்த தகவல்கள் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் 2025 ஆகஸ்டில் லஞ்ச ஒழிப்பு துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் குழு அமைத்து மே 26-ல் கூட்டம் நடத்தியதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பொதுப்பணித்துறை குழு எட்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அதன் விவரங்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் DVAC உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது.





