ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய மாலுமிகள் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறி, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது.

வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் அழைக்கப்பட்டுள்ளார். சர்வதேசக் கடல் பகுதியில் மூன்று நாட்களுக்குள் மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் குறித்து அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கூறியுள்ளது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் எச்சரித்தது.

இந்தியாவின் கடும் கவலைகளை தமது அதிகாரிகளிடம் எடுத்துரைக்குமாறு அமெரிக்க அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும், அப்பகுதியில் செயல்படும் படைகள் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.