மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார். பின்லாந்து பயணத்தின் போது நடந்த கலந்துரையாடலில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பின்னணியில், உலகளாவிய எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்த உதவும் வகையில் 2022-ல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குமாறு அமெரிக்கா இந்தியாவை ஊக்குவித்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
விலை மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குகிறது என்றும், நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்தியே எரிசக்தித் தேவைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக முதலில் வரிகள் விதித்த அமெரிக்கா பின்னர் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது இப்போது மட்டும் அல்ல; பல ஆண்டுகளாகவே இது நடைபெறுகிறது என்றும் ஜெய்சங்கர் கூறினார். இந்தியர்கள் ஐரோப்பாவுக்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் செய்ததில்லை என்றும், இந்திய ஆயுதங்களைக் கொண்டு எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.





