காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கான கட்சி வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை, காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியாகக் குற்றம்சாட்டினார்.

இந்த நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், கால தாமதம் ஏற்படாமல் நிவாரணம் கிடைக்க உச்ச நீதிமன்றமே தலையிட வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாகவும் கார்கே தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம், பின்னர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றை அணுகி அதன் பின் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனால் வழக்குகள் இழுத்தடிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இப்போது உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் கூறினார்.

வேட்பு மனு நிராகரிப்பு சட்டவிரோதம் மட்டுமல்ல; அறநெறிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என கார்கே விமர்சித்தார். பிரதமரின் ஒப்புதல் அல்லது வழிகாட்டுதல் இன்றி இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க முடியாது என்றும், காங்கிரசை பலவீனப்படுத்தவும் ஜனநாயகத்தை சீர்குலைக்கவும் இது ஒரு சதியின் பகுதியாகவே தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகளை துன்புறுத்தி ஒடுக்குவதே நோக்கம் என்பதையே இத்தகைய செயல்கள் காட்டுகின்றன என்றும் கார்கே தெரிவித்தார்.