தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. தொடருமா என்பது குறித்து ஜூன் 27ல் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் நீடிப்பது, வெளியேறுவது அல்லது தனித்து போட்டியிடுவது போன்ற முடிவுகள் அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றார். ம.தி.மு.க.வைப் பொறுத்தவரை, தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், ‘நிடி ஆயோக்’ கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றது ஆரோக்கியமான விஷயம் என்றும், தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கினால் மட்டுமே மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

‘சிங்கப்பெண்’ திட்டம் பெண்களுக்கு பெரிய பாதுகாப்பை வழங்கும் என பாராட்டிய அவர், மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் விஜய் கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறினார். நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து, அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை நிர்ணயித்து சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.