புதுடில்லி: பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 12 ஆண்டுகளாக பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுப்பதில் அரசின் கவனம் பல துறைகளிலும் தெளிவாகப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார். தொழில்முனைவு முதல் கல்வி, சுகாதாரம், துப்புரவு, வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல் மற்றும் நிர்வாகம் வரை பெண்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பெண்களின் கண்ணியம், வாய்ப்புகள் விரிவாக்கம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக மோடி தெரிவித்தார். இதன் மூலம் பெண்கள் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்தி, தேசக் கட்டமைப்பில் மேலும் வலுவாக பங்களிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அறிவியல், விண்வெளி, கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் ‘பெண் சக்தி’ முத்திரை பதிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பது புதிய வாய்ப்புகளைத் திறப்பதோடு, நாடு முழுவதும் வளர்ச்சியை மாற்றியமைக்க உதவுகிறது என்றும் அவர் கூறினார்.





