சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 15க்கு ஒத்திவைத்தது.

ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் ‘பஞ்சமி நிலத்தில்’ அலுவலகம் அமைந்திருப்பதாக, பா.ஜ. பிரமுகர் சீனிவாசன் தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விளக்கம் கோரி 2019 நவம்பர் மற்றும் டிசம்பரில் ஆணையம் முரசொலி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸ்களை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நில உரிமை குறித்து ஆணையம் உத்தரவிடுவதற்கு தடை கோரியது. முன்பு, புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 2019ல் தலைமைச் செயலர் அளித்த அறிக்கையில் அது பஞ்சமி நிலம் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், நில உரிமை குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், புகார் அரசியல் நோக்கத்துடன் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, புகாரை விசாரிப்பதற்கு அரசியல் சட்ட ரீதியான தடை இல்லை என்றும், ஆணையம் நிலத்தின் உரிமையை தீர்மானிக்காமல் புகார் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அமர்வு இறுதி விசாரணையை ஜூலை 15க்கு ஒத்திவைத்தது.