ஜூன் 21 அன்று நடைபெற உள்ள இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது. கடந்த மாதத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மறுதேர்வு நடத்தப்படுகிறது.

என்.டி.ஏ அறிவிப்பின்படி, தேர்வு பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். நிர்வாக நடைமுறைகள் காரணமாக தேர்வெழுதும் நேரம் பாதிக்கப்படலாம் என மாணவர்கள் கருதிய நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதுடன், முக்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மறுதேர்வில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் புத்தகத்தில் ‘தோராயக் கணக்கீடு’ செய்யும் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் என்.டி.ஏ தெரிவித்துள்ளது.