புதிதாக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை கையாளும் முதல் வழக்கே ஆளுங்கட்சியுடன் தொடர்புடையதா என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து அவர் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், முதல்வரின் ரசிகை என கூறப்படும் பெண் ஒருவர் த.வெ.க. நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பழனிசாமி தெரிவித்தார். மேலும், ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவுடன் கட்சியை சேர்ந்த இருவர் இந்த குற்றத்தை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சம்பவத்தை மறைக்க முயன்று, அந்த பெண்ணிடம் அமைச்சர் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி எம்.எல்.ஏ. சமரசம் பேசியதாகவும் பழனிசாமி கூறினார். இத்தகைய விவகாரத்தில் சமரசம் பேசும் ஒரு மக்கள் பிரதிநிதியை முதல்வர் ஏற்றுக்கொள்வாரா என அவர் வினவினார்.
மேலும், ‘அமைச்சருக்கு தெரியும், மேலிடத்திற்கு தெரியும்’ என்ற பேச்சுகள் வருவதாக குறிப்பிட்டு, அந்த ‘மேலிடம்’ யார் என கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண் மற்றொரு பெண்ணுக்கும் இதேபோன்ற கொடுமை நடந்ததாக கூறியுள்ளதாகவும், அரசியல் இடையூறு இன்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.




