தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின் தடைகள் பல துறைகளையும் பாதிக்கின்றன என்றும், எதிர்கால தேவைக்கேற்ப மின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் உட்கட்டமைப்பு திட்டமிடல் போதிய அளவில் இல்லை என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பை மேற்கோள் காட்டிய அவர், 2026–27ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை 23,013 மெகாவாட் வரை உயரலாம் என்றார். கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், முன்கூட்டிய திட்டமிடல் நடைபெறவில்லை எனவும் கூறினார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரவு நேர மின் தடையால் வீடுகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் தூங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்க முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

அமைச்சர் தரப்பில் ‘பியூஸ் கேரியர் திருட்டு’ என விளக்கம் கூறப்படுவதை கிண்டல் செய்த அவர், தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் இப்படியான திருட்டு நடக்குமா என கேள்வி எழுப்பினார். முந்தைய காலத்தில் ‘மின் தடைக்கு அணில்கள் காரணம்’ என கூறப்பட்டதை நினைவுபடுத்திய அவர், காரணம் தேடும் சால்ஜாப்பு பேச்சுகளை விடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.