மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
மத்திய பிரதேசத்தில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜ சார்பில் மூவர் போட்டியிட, காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜ வேட்பாளர் மகேஷ் கெவத், தெலுங்கானா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவர் வெளிப்படுத்தவில்லை என புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், வேட்பாளர்கள் தங்கள்மீது நிலுவையில் உள்ள வழக்குகளை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்ற சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி, தேர்தல் அதிகாரி மீனாட்சியின் வேட்புமனுவை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. ஆனால் தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை சட்டபூர்வமானது எனக் கூறி தேர்தல் ஆணையம் தலையிட மறுத்தது. தொடர்ந்து மீனாட்சி நடராஜன் உச்சநீதிமன்றத்தை அணுகினார்; அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஆனால், இத்தகைய விவகாரங்களில் தேர்தலை எதிர்த்து தேர்தல் மனு தாக்கல் செய்வதே சரியான வழிமுறை எனக் கூறிய நீதிமன்றம், இந்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து தள்ளுபடி செய்தது.





