வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனைக்கு நெருங்கியுள்ளதாக ராய்ட்டர் மற்றும் போர்ப்ஸ் மேற்கோளிட்டு வெளியிட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான மஸ்கின் செல்வத்தின் பெரும்பகுதி ஸ்பேஸ் எக்ஸுடன் தொடர்புடையதாகவே இருந்து வந்தது. நிறுவனம் பொது பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) இறங்கியதன் மூலம் அந்த பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 55.56 கோடி பங்குகள் ஒவ்வொன்றும் 135 அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டு மொத்தம் 75 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.77 டிரில்லியன் டாலராக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஐபிஓவுக்கு முன் ஸ்பேஸ் எக்ஸ் மதிப்பு சுமார் 780 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தொடர்பான சொத்து மதிப்பு 866 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது; டெஸ்லா உள்ளிட்ட பிற சொத்துகளையும் சேர்த்தால் மொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை தாண்டும் என கணிக்கப்படுகிறது.





