புதுடில்லி: சாலை விபத்து இழப்பீடு கணக்கீட்டில் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் “இல்லத்தரசி” எனக் கருதி அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீட்டுப்பணி மற்றும் பராமரிப்பு உழைப்புக்கு மறுக்க முடியாத பொருளாதார மதிப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பு, பஞ்சாபில் 2001ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த வழக்கில் வழங்கப்பட்டது. அவரது கணவரும் மூன்று குழந்தைகளும் வாகன விபத்து தீர்ப்பாயத்தை அணுக, ரூ.2.42 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் பஞ்சாப்–ஹரியானா உயர் நீதிமன்றம் இழப்பீட்டை ரூ.8.43 லட்சமாக உயர்த்தி, 7.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.

இழப்பீடு கணக்கிடப்பட்ட முறையே தவறானது எனக் கூறி கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊதியமில்லா வீட்டுப்பணி மற்றும் அரவணைப்பு போன்ற பராமரிப்பு உழைப்பு பொருளாதாரத்திற்கும் மனித மூலதன உருவாக்கத்திற்கும் முக்கிய பங்களிப்பை அளிப்பதாகக் குறிப்பிட்டது.

இதுபோன்ற வழக்குகளில் இழப்பீடு கணக்கிடும்போது, இல்லத்தரசியின் உழைப்பை மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.30,000 என மதிப்பீடு செய்து கணக்கிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் தாமதமாக முடிவடைவது குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், இத்தகைய வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தியது.