திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தினார்.
இதனை வலியுறுத்தும் வகையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று அடி பித்தளை “வேல்” ஒன்றை காணிக்கையாக செலுத்தினார். இது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையாகவும், பொதுமக்கள் முன் வலியுறுத்தலாகவும் அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததாகவும், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தீபம் ஏற்றப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தி.மு.க. அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தேர்தல் கணக்கில் செயல்பட்டதாகவும், அதற்கான எதிர்வினை தேர்தல் முடிவில் வெளிப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான நிர்மல் குமார் “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரும்” என கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சட்ட அமைச்சராக இருப்பவர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தீபம் ஏற்றத் தடையிட்டவர்கள் இன்று வேலை இன்றி வீட்டில் முடங்கி இருப்பதாக கூறிய ராம ரவிக்குமார், அதே நிலை த.வெ.க.க்கும் இந்தத் தொகுதியின் அமைச்சருக்கும் வந்து விடக்கூடாது என்று எச்சரித்தார்.





