சென்னை: அரசு மருத்துவமனைகளில் சில முக்கிய புற்றுநோய் கீமோதெரபி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நோயாளியின் உடல் நிலை மற்றும் புற்றுநோய் தன்மைக்கு ஏற்ப மாற்று மருந்துகளை பயன்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மார்பக, குடல் மற்றும் ஜீரண மண்டல புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ரத்த நாளங்கள் வழியாக கூட்டு கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வகை சிகிச்சை கலவைகளில் ‘சிஸ்பிளாட்டின்’, ‘கார்போபிளாட்டின்’, ‘ஆக்சலிபிளாட்டின்’ போன்ற பிளாட்டினம் அடிப்படையிலான மருந்துகளில் ஒன்று இடம்பெறுவது வழக்கம்.

இந்த மருந்துகளும் அவற்றின் மூலப் பொருட்களும் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா–ஈரான் போர் சூழல் காரணமாக பிளாட்டினம் மீதான வரியும் விலையும் உயர்ந்ததுடன், ஹார்முஸ் நீரிணை வழியாக மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, வழக்கமாக ரூ.500-க்குள் கிடைக்கும் இந்த மருந்துகளின் விலை இந்தியாவில் மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தகவல். அரசு மருத்துவமனைகளுக்கான மருந்துகளை மாநில மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்து வரும் நிலையில், தட்டுப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மற்றும் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கழக அதிகாரிகள் கூறுகையில், புற்றுநோய் சிகிச்சையில் 400-க்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன; இதில் மூன்று அல்லது நான்கு மருந்துகளின் வினியோகம் தேசிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். சந்தையில் கிடைத்தால் கூடுதல் விலைக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீராகும் வரை மாற்று மருந்துகளை பயன்படுத்த புற்றுநோய் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் தாரேஸ் அகமது, மருந்துகள் தடையின்றி கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் வினியோகம் சீராகும் என நம்புவதாகவும் கூறினார்.