சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை குறைக்கும் வகையில் முன்பதிவு (அப்பாயிண்ட்மெண்ட்) திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். குறிப்பாக திங்கள், செவ்வாய் நாட்களில் நோயாளிகள் வருகை அதிகமாக இருந்து, 3,000 பேர் வரை வருவதால் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு தீர்வாக தனியார் மருத்துவமனைகள் போல முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும் என்றும், தனியார் நிறுவனத்தின் மூலம் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செயலியில் ஆதார் பயன்படுத்தி காலை 8.00 முதல் 9.00 மணி வரை முன்பதிவு செய்ய முடியும் என்றார்.
இந்த திட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் அனுபவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாரந்தோறும் கூடி வசதிகள் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆலோசித்து கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் நர்சிங் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும், மின் தடை ஏற்பட்டாலும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மின் தடை போன்ற பிரச்னைகளை கையாள மக்கள் நல்வாழ்வு துறை, பொதுப்பணித் துறை மற்றும் மின் வாரியம் இணைந்து ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





