தமிழகத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை; இது வெறும் கட்டமைப்பு திட்டம் அல்ல, எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முதலீடு என தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தை காலத்திற்கேற்ப விரிவாக்கம் செய்ய முடியாத கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 5,600 ஏக்கரில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், அரசு நிலம் தவிர சுமார் 3,700 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயிகளுக்கு ஆதரவாக முன்பு களமிறங்கிய நடிகர் விஜயின் கட்சி ஆட்சிக்கு வந்ததையடுத்து, பணிகள் தொடருமா, கைவிடப்படுமா அல்லது இடம் மாறுமா என்ற குழப்பம் நிலவுகிறது.

இந்த சூழலில், ‘சூப்பர் சென்னை’ அமைப்பு நடத்திய கருத்தரங்கில், விமான நிலைய திட்டமிடல் காலத்துக்கு முன்பே தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி, கொள்ளளவு 75% எட்டும் போது விரிவாக்கம் தொடங்க வேண்டும்; 90% அடையும் போது அடுத்த திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், புதிய விமான நிலையம் அடுத்த 30 ஆண்டுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் விமான நிறுவன தலைமை நிதி அதிகாரி விஜய் கோபாலன் உள்ளிட்டோர், தற்போதைய விமான நிலையத்தில் ஓடுபாதை மற்றும் விமான நிறுத்துமிடம் போன்ற கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், சீரமைப்பு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்தனர். உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக் துறையினர், தமிழகத்தின் தொழில் திறனில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினாலும், விமான இணைப்பு வசதிகள் போதாமை தடையாக இருப்பதாகக் கூறி, மற்ற பெரிய நகரங்கள் போல தமிழக அரசும் இரண்டாவது விமான நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.