பெட்ரோல் பங்க்களில் டீசல் விற்பனையை ஒழுங்குபடுத்த, ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு வாகனத்திற்கு நாளுக்கு 200 லிட்டருக்கு மேல் வழங்கக் கூடாது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மானிய விலையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விற்பனையால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும், சிலர் பீதி காரணமாக அதிக அளவில் எரிபொருள் வாங்கி இருப்பு வைத்துவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதிய வழிமுறைகளின்படி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுடன் தொடர்புடைய மொத்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க்களில் இருந்து பெட்ரோல்/டீசல் வாங்கக் கூடாது; அவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும். மேலும், பங்க்களில் டீசலை வாகனங்களில் மட்டுமே நிரப்ப வேண்டும்; நிரப்பிய டீசலை மறு விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





