சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய திமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்ததாக கூறப்படும் அறிக்கையில், சில மூத்த நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் அரசு ஒப்பந்தப் பணிகளை பினாமி பெயர்களில் மற்றும் ‘சிண்டிகேட்’ முறையில் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்களை பட்டியலிட்டுள்ளதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுக்காக மொத்தம் 19 கள ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், 13 குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன; மீதமுள்ள குழுக்கள் அவகாசம் கேட்டுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேரிடம் கருத்து சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 3,000 பக்கங்களாக உள்ளதாக கூறப்படும் அறிக்கையில், வருங்கால தேர்தல்களில் தனித்து போட்டியிடுதல், உட்கட்சி பிரச்னைகளை நீட்டிக்காமல் உடனடி நடவடிக்கை எடுதல், ஒன்றிய செயலர்களிடம் தேர்தல் பணிக்காக வழங்கிய பணத்தை சுருட்டியதாக கூறப்படுபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்.
மேலும், இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கும் ஒன்றிய செயலர்களை மாற்றுதல், சத்துணவு பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர் நியமனங்களில் கட்சியினர் பரிந்துரைகளை நிராகரித்த மாவட்டச் செயலர்கள்மீது நடவடிக்கை எடுதல், உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை சீரமைத்து உற்சாகமாக பணியாற்றும் வகையில் அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




