ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்திற்கு புதியதாகவும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் கூடிய அதிவேக இணையதளம் ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (MNIT) நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, ஒரு மாணவர் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக கேப்ட்சா தொடர்பான தடைகள், தட்கால் முன்பதிவு நேரங்களில் இணையதள முடக்கம், ஓடிபி (OTP) கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் பல பயனர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் முன்னிலையில் ரயில்வே உயரதிகாரிகளை தொடர்புகொண்டு 30 நாட்களில் புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தை உருவாக்க முடியுமா என்று கேட்டார். பின்னர், ஜூலை 15 முதல் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்தார்.





