மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் வியாழக்கிழமை மாலை தடைபட்டு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
செயலிகளை திறந்ததும் தானாகவே லாக் அவுட் ஆகிவிட்டதாகவும், மீண்டும் உள்நுழைய முடியவில்லை என்றும் பயனர்கள் தெரிவித்தனர். இணையதளத்தில் வெற்று பக்கம் மட்டும் தோன்றியதாகவும் புகார்கள் வந்தன.
சேவை முடக்கத்தால் அவதியடைந்தவர்கள், பிற சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டு புகார் தெரிவித்தனர். மாலை 7:45 மணியளவில் இன்ஸ்டாகிராம் தொடர்பாக சுமார் 7,500 புகார்கள் பதிவானதாகவும், அது தொடர்ந்து அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிரமம் அனுபவிப்பதை அறிந்துள்ளதாகவும், அதை சரி செய்யும் பணி நடக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனால், முடக்கத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
இந்த பிரச்னை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.





