தாய்லாந்திலிருந்து உயர் ரக கஞ்சாவை கடத்த முயன்றதாகக் கூறி, கேரளாவைச் சேர்ந்த 28 வயது மாடல் ஹர்ஷா சன்னியை மும்பை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ‘ஹைட்ரோபோனிக் மரிஜுவானா’ சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11.82 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாங்காக் நகரிலிருந்து மும்பைக்கு வந்த விமானம் தரையிறங்கியபோது, அந்தப் பெண் பதற்றமாக இருந்ததை கவனித்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி, உடைமைகளை சோதனை செய்தனர்.

சோதனையில், டிராலி பைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரசாயன பரிசோதனையில் அவை ‘ஹைட்ரோபோனிக் மரிஜுவானா’ இலைகள் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சரக்கு மும்பைக்குள் மட்டுமா அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஹர்ஷா சன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

ஹர்ஷா சன்னி 2025ல் நடந்த ‘மிஸஸ் கேரளா’ அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் முகம் தெரியாத ஒருவர் ஒரு பையை தன்னிடம் ஒப்படைத்து, இந்தியாவில் வந்து பெற்றுக்கொள்வதாக கூறியதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், அந்த விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.