டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிடி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை நடந்த 11 கூட்டங்களில், முதன்முறையாக எந்த முதல்வரும் விடுபடாமல் அனைவரும் பங்கேற்ற கூட்டமாக இது குறிப்பிடப்படுகிறது.

கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தே விவாதங்கள் நடந்ததாகவும், அரசியல் உரசல்கள் எதுவும் வெளிப்படையாக இல்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்முறையாக பதவியேற்றுள்ள விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, கேரள முதல்வர் சதீசன் ஆகியோரும் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.

கூட்டம் தொடங்குவதற்கு முன், ஹிந்தி–ஆங்கில மொழிபெயர்ப்பு வசதி இருப்பதை பிரதமர் மோடியே குறிப்பிட்டதாகவும், குறிப்பாக முதல்வர் விஜயை நோக்கி அந்த வசதியை பயன்படுத்துமாறு ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் புன்முறுவலுடன் பதிலளித்தாலும், நாள் முழுவதும் மொழிபெயர்ப்பு ஹெட்போனை அணியாமல் மற்ற முதல்வர்களின் உரைகளை கேட்டதாக தகவல்.

மேலும், விஜய் தனது ஆங்கில உரையை வழங்கப்பட்ட ஐந்து நிமிட நேரக்கெடுவுக்குள் துல்லியமாக முடித்தது அரங்கில் பாராட்டைப் பெற்றதாக கூறப்படுகிறது. மற்ற மாநில முதல்வர்களிடம் நேரத்துக்குள் முடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிடி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹரி, விஜயின் உரை தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். 2035க்குள் தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விஜயின் குறிப்பும் கவனம் பெற்றதாக அவர் தெரிவித்தார். இடைவேளைகளில் பிரதமர் மோடி விஜயை இருமுறை அழைத்து உரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.