ஒடிஷா மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் எல்கேஜி (மழலையர்) முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை கல்வி முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மோகன் சரண் மஜி அறிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் கல்வி கிடைக்கும்; குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்றார்.
இந்த அறிவிப்பின் மூலம், நாட்டிலேயே கல்வியை முழுமையாக இலவசமாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஒடிஷா பெற்றுள்ளதாகவும், இது மாநில இளைஞர்களின் அடித்தளத்தை வலுப்படுத்தி நீண்டகால வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாக தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் ‘கோதாவரிஷ் மிஸ்ரா ஆதர்ஷ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 26,615 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 45,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கிராமப்புறங்களில் 18 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன; மேலும் நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒடிஷாவை கிழக்கு இந்தியாவின் உயர்கல்வி மையமாக மாற்ற இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





