இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்நாட்டின் வறுமை நிலவரம் குறித்து வெளியான ஆய்வறிக்கை கவலைக்கிடமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 2.7 கோடி பேர் புதிதாக வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2018–19ல் 21.9% ஆக இருந்த வறுமை விகிதம், 2024–25ல் 28.9% ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 25.9 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 7 கோடி பேர் வறுமையில் வாடுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் அதிகபட்சமாக சுமார் 47% பேர் வறுமையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, மேற்காசிய மோதலின் தாக்கம் ஆகியவை வறுமை அதிகரிக்க காரணங்களாக உள்ளன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.