திருவனந்தபுரம்: ராகுல் காந்தியின் அணுகுமுறை இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக அது பாஜவுக்கு மறைமுகமாக உதவும் வகையில் உள்ளது என்று முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

இந்த கருத்துகள், சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் இடையிலான தொடரும் அரசியல் மோதல்களின் பின்னணியில் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத்தில் இண்டி கூட்டணியில் இரு கட்சிகளும் இருந்தாலும், கேரள மாநில அரசியலில் இருவரும் எதிரணிகளாக செயல்படுகின்றனர்.

இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று ராகுல் கூறியதாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்த விஜயன், யார் யாரை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பதில் தனக்கு கவலை இல்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் கட்டிப்பிடித்த புகைப்படங்களை அனைவரும் பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ராகுலின் கருத்துகள், அவர் இண்டி கூட்டணியை எவ்வாறு பார்க்கிறார், எவ்வாறு அணுகுகிறார் என்பதைக் காட்டுவதாக விஜயன் தெரிவித்தார். மேலும் அந்த கூட்டத்தில் தானே மட்டுமல்லாமல் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத தலைவர்களும் காங்கிரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக கூறினார்.

தற்போதைய காங்கிரசின் அணுகுமுறையை உருவாக்கியது ராகுல் என்றும், அந்த அணுகுமுறை கூட்டணியை பலப்படுத்தாது; மாறாக பாஜவுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என்றும் விஜயன் குற்றம்சாட்டினார்.