சென்னை: விதிமீறல் செய்த குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முந்தைய ஆட்சி காலத்தில் குறைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழக கனிமவளத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 3,000 இடங்களில் கருங்கல் குவாரிகளும் கிரஷர்களும் செயல்படுவதாகவும், அதில் சுமார் 2,000 குவாரிகளுக்கு மட்டுமே அரசு அனுமதி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி எவ்வளவு கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டது என்பதை கள ஆய்வின் அடிப்படையில் மதிப்பிட்டு அபராதம் விதிப்பது நடைமுறையாக உள்ளது.

ஆனால் மேலிடத் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் அபராதத் தொகைகள் பின்னர் குறைக்கப்பட்டதாக துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நடந்த உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குவாரிகளில் நடந்த முறைகேடுகளை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள அபராதங்களை சரிபார்த்தபோது புதிய தகவல்கள் வெளிவந்ததாக தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 24 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகபட்சம் 270 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் துறையின் மேலிட ஆதரவை பயன்படுத்தி அந்த அபராதம் சுமார் 17 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், இதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல் பிற குவாரிகளிலும் அபராத நிர்ணயத்தில் முறைகேடுகள் நடந்ததா, அதனால் ஏற்பட்ட இழப்பு என்ன என்பதையும் துறை ஆய்வு செய்து வருகிறது.