சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் பயன்படுத்த வேண்டாம் என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ரஜினிகாந்தின் உத்தரவின்படி வெளியிடப்படுவதாகவும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில், ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தக் கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிகழ்கால அரசியல் சூழல் பின்னணியில் சில அமைப்புகள் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் சில புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.




