சீமைக்கருவேல (Prosopis juliflora) மரங்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் தன்னார்வமாக முன்வந்தால் அவர்களை ஈடுபடுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த பொதுநல வழக்கில், சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர் உள்ளிட்ட வளங்களை உறிஞ்சி வெப்பத்தை அதிகரிப்பதாகவும், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு முன் மார்ச் 18 அன்று இரு நீதிபதிகள் அமர்வு, மரங்களை வேருடன் அகற்றி அங்கு உள்ளூர் தாவரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும், அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தது. அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன் அகற்றும் பணியை நிறைவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தங்களது நிர்வாகத்தின் மூலம் அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது. வழக்கு விசாரணை ஜூலை 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.





