‘வீட்டில் இருப்பவர்கள் சும்மா இருக்கிறார்கள்’ என்ற பார்வைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீட்டை நிர்வகிக்கும் பெண்களின் உழைப்புக்கு பொருளாதார மதிப்பு இருப்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் தீர்ப்பை வழங்கியுள்ளது. குடும்பத்தை நடத்தும் பெண்கள் வெறும் ‘இல்லத்தரசிகள்’ அல்ல; தேசத்தைக் கட்டமைப்பவர்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

விபத்து இழப்பீடு வழக்குகளில், இல்லத்தரசி உயிரிழந்தால் அவர்களின் உழைப்பை மாதம் ரூ.30,000 வருமானம் ஈட்டுபவருக்குச் சமமாகக் கணக்கிட்டு இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளுக்கு இது வழிகாட்டியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்தத் தீர்ப்பை வரவேற்று கருத்துகளைப் பகிர்ந்தனர். 24 மணி நேர வீட்டு உழைப்பு, குழந்தை பராமரிப்பு, குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் ஆகியவை ‘வருமானமில்லாத வேலை’ என்று குறைத்து மதிப்பிடப்படுவது தவறு என்றும், இத்தீர்ப்பு அந்த உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், தாய் அல்லது மனைவி இழப்பால் குடும்பம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு, கல்வி, அன்பு-அரவணைப்பு போன்ற இழப்புகளையும் சமூகமாக உணரச் செய்யும் தீர்ப்பாக இது இருப்பதாக சிலர் தெரிவித்தனர். நீண்ட காலமாக நிலவி வந்த தவறான சமூகக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகவும் இதை அவர்கள் விவரித்தனர்.