தமிழக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரும் பொதுநல மனுவில், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 10 அன்று நடைபெற்ற விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலில் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதாகவும், இது விமர்சனங்களை ஏற்படுத்தியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் சடங்கு அல்ல; தமிழர்களின் உணர்வு, கலாசாரம், அடையாளத்தின் வெளிப்பாடு என வாதிடப்பட்டுள்ளது. மேலும், ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வலியுறுத்தும் மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலாசார மோதல் ஏற்படாமல் இருக்க, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எட்டு வாரங்களில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.