சென்னை வானிலை மையம் (ஆர்எம்சி) இன்று (ஜூன் 13) தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையில், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (ஜூன் 14) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் ஜூன் 19 வரை தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.