வாஷிங்டன்: ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நெதன்யாகு டிரம்பை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஈரான் படைகள் ஒரு அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து தாக்குதலை மீண்டும் தொடங்க டிரம்ப் உத்தரவிட்டதாகவும், ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது குறித்து பேசினார் என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமெரிக்கா–ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தாக்குதல்களை நிறுத்துவதாகவும், ஈரான் ஒப்பந்தத்திற்கு சம்மதித்ததாகவும் டிரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த முடிவு குறித்து நெதன்யாகுவுக்கும் இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் பொது ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே தெரிய வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.





