சென்னை: நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.

தவெக ஐடி அணி வெளியிட்ட அறிக்கையில், நீட்டை நீக்கும் “ரகசியம் தெரியும்” என முன்பு கூறி மக்களை ஏமாற்றியதாகவும், தற்போது மேலும் தவறான தகவல்களை பரப்புவதாகவும் உதயநிதியை விமர்சித்தது. நீட்டை நீக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாகவும், மாநில அரசால் அதை நீக்க முடியாது என்பதையும் மறைத்து பேசப்படுவதாகவும் தெரிவித்தது.

மேலும், “நீட் மட்டுமே உலகம் இல்லை” என விஜய் கூறியது, நீட் நீக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் என தவெக விளக்கம் அளித்தது. அந்த கருத்தை திரித்து கதை கட்டுவதாகவும் குற்றம்சாட்டியது.

அறிக்கையில், முந்தைய திட்டங்களுக்கு “ஸ்டிக்கர்” ஒட்டுவதாகவும் ஆட்சியாளர்களை விமர்சித்து, “அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பா உருட்ட வேண்டாம்” என உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து இப்படிப் பேசினால் மக்கள் மேலும் புறந்தள்ளுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.