வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம் வரை விற்கப்படும் ஒரு மருந்தை, இந்தியாவிலிருந்து ரூ.950க்கு பெற்றதாக அமெரிக்க பெண் ஒருவர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்டோரியா என்ற அந்த பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், மருத்துவர் பரிந்துரைத்த மருந்திற்கு தனது மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்த மறுத்ததாக தெரிவித்தார். இதனால் அந்த மருந்தை தனிப்பணத்தில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து மருத்துவரை அணுகிய போது, கனடாவைச் சேர்ந்த ஒரு மருந்தகத்திற்கு பரிந்துரை சீட்டை அனுப்புமாறு அவர் அறிவுறுத்தியதாக விக்டோரியா கூறினார். அந்த மருந்தகம் இந்திய மருந்து உற்பத்தியாளரிடமிருந்து மருந்தை பெற்றுத் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மருந்து வாங்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் கூரியர் செலவு உட்பட மொத்தம் ரூ.2,400 மட்டுமே என கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதில் கூரியர் கட்டணம் ரூ.1,450 என்பதால், மருந்தின் விலை ரூ.950 மட்டுமே என அவர் கூறினார்.
அமெரிக்க சுகாதாரக் கட்டமைப்பை கடுமையாக விமர்சித்த விக்டோரியா, ஒரே மருந்திற்கு இவ்வளவு அதிகமாக வசூலிக்கப்படும் தொகை யாரிடம் செல்கிறது என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க மருத்துவ அமைப்பு குறித்து நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது.





