சண்டிகர்: ஹரியானா மாநிலம் சோனிபத் நகரில் உள்ள அசோகா பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக முதல்வர் விஜய் குறித்து கல்வி ஆய்வு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய பொருளாதாரத்தின் அரசியல் பாடத்தை கற்பிக்கும் ‘விசிட்டிங் புரபசர்’ ஆக இருக்கும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்தில் வகுப்பிற்கு சென்றபோது மாணவர்கள் கைதட்டி வரவேற்றதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், பின்னர் அது அவர் எம்.பி. ஆனதற்கான வாழ்த்தாகத் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், முதல்வர் விஜய்க்கு அவர் நெருக்கம் உள்ளதாகக் கூறி, விஜய் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்ய தங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என மாணவர்கள் கேட்டதாகவும், அதற்கு அவர் உதவுவதாக உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், முதல்வர் விஜய் குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும், அவர் பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்ற வேண்டும் எனவும் மின்னஞ்சல் மூலம் பிரவீனிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு, முதல்வரை அழைத்து வருவதாக பிரவீன் பதில் அனுப்பியதாகவும், இந்தாண்டு இறுதியில் விஜய் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதால் யேல் செல்லும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த சி.என். அண்ணாதுரை 1968ல் யேல் பல்கலைக்கழகத்தில் ‘விசிட்டிங் பெலோஷிப்’ பெற்றதாகவும், அமெரிக்கர் அல்லாதவர்களில் அந்த தகுதியை பெற்ற முதல் நபர் அவர் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.